Tuesday, 22 March 2016

சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு வனப்பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப்பகுதிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள். பின்னர் மாலையில் ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள். காலையிலும், மாலையிலும் பாலைக் கறந்து மாட்டின் உரிமையாளருக்கு கொடுப்பார்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது திருக்கோயில் உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக் கொண்டே இருக்கும். காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும். இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது. திம்பம்மலையின் அடிவாரத்தில் தென்மாரி தெய்வத்தின் அவதாரம் நிகழப்போகிறது என்பதை உலகினுக்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும், புலியும் ஒரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

ஒரு பட்டியிலிருந்த காராம் பசு ஒன்று பால் கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமல் தன் கன்றுக்கும் கொடுக்காமல் இருப்பதை மாடுகளை மேய்ப்போன் அறிந்தான். மறுநாள் மாட்டினைப் பின் தொடர்ந்து சென்று கவனித்தார். அப்பசு தன் பாலை தினந்தோறும் ஓரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்குப்புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாகப் பொழிவதை மறைவிலிருந்து பார்த்தார். இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அவர் மறுநாள் சுற்றுவட்டார கிராமமக்கள் ஊர் பெரியோர்களிடம் விபரத்தை சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு மாட்டினைப் பின் தொடர்ந்து சென்று ஓரு குறிப்பிட்ட இடத்தில் காராம் பசு பால் சொரிவதைக் காண்பித்தார். அனைவரும் இவ்வரிய நிகழ்ச்சியினை கண்ணுற்று மெய்சிலிர்ந்து நின்றார்கள். இதுதெய்வத்தின் திருவிளையாடல் என்றெண்ணிக் கைகூப்பித் தொழுதார்கள். மக்கள் அனைவரும் அவ்விடத்தைச் சுத்தம் செய்யுங்கால் கணங்குப் புற்கள் சூழ்ந்த புற்றும் அதனருகில் சுயம்பு லிங்கத் திருவுருவம் வேங்கை மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஓருவருக்கு அருள் உண்டாகி தான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து பொதி மாடுகளை ஓட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன் என்றும் எழில் மிகுந்த இவ்வியற்கைச் சூழலில் தான் தங்கிவிட்டதாகவும், தன்னை இனிமேல் பண்ணாரி எனப் போற்றி வழிபட்டு வாருங்கள் எனவும் அருள்வாக்கில் கூறினார். அன்னையின் அருள்வாக்கின்படி அவ்விடத்தில் கணாங்குப் புற்கள் கொண்டு  ஓருகுடில் அமைத்து கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அன்னையை வழிபட்டு வந்தனர். பின்பு ஊர்மக்களும், பெரியதனக்காரர்களும் அன்னையின் சிறப்புக்கருதி அன்னைக்கு விமானத்துடன் கூடிய சிறு கோயில் அமைத்து பத்மபீடத்துடன் திருவுருவம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். அம்பிகையை பயபக்தியுடன் சதாதுதிக்கும் அன்பர்களுக்கு வேண்டியதை வேண்டிய வண்ணம் அருள்பாலிக்கிறாள்.

இதனால் பக்தர்கள் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்தும், பொங்கலிட்டும், முடிகளைந்தும் உருள்தண்டம் முதலியன செய்தும் வழிபடுகின்றனர். அமாவாசை, ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அன்னையை வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். இத்திருத்தலத்தில் அம்பிக்கையின் கோயில் ஒரு கோபுரத்துடனும் அர்த்தமண்டபம், மகாமண்டபம் இவைகளுடனும் அமைந்திருக்கிறது. கோயில் கருங்கற்களால் ஆக்கப்பட்டு மண்டபத் தூண்களும் சில சித்திர வேலைப்பாடுகள் மிகத்திறமையுடனே செய்யப்பட்டிருக்கின்றன. வனத்திடையே அர்த்த, மகா, சோபன மண்டபம் மற்றும் சுற்றுப்பிரகார மண்டபங்களுடன் அமைந்த நீண்ட கோபுரத்தோடு விளங்கும் இக்கோயில், பக்த கோடிகளின் உள்ளத்தைக் கவர்வதாகும். இவ்வாலயத்திற்குக் கடந்த 03.09.1998-ம்தேதி ரூ-50 இலட்சம் செலவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பூச்சாற்று : ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த திங்கட்கிழமையில் (சிலஆண்டுகளில் இது பின்னாக வரும்) உத்திரம் நட்சத்திரத்தில் இரவு சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம், புதூர், தாண்டாம்பாளையம், ஆகிய ஊரைச் சார்ந்த பெரியதனக்கார்களும், தர்மகர்த்தாக்களும், ஆலய அதிகாரிகளும் வந்திருந்து அம்மனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்வித்துப் பூச்சாற்று நடத்திடுவர். வியாழனன்று மஞ்சள்நீர் உற்சவமும், திருக்கோயிலாரால் அன்னதானமும் நடைபெறும். அன்று அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமையன்று மாலை அம்மனுக்கு திருவிளக்குப் பூசை நடைபெறும். மேற்படி பூசையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள்.

குண்டம் திருவிழா:

திங்கட்கிழமை பகற்பொழுதில் திருவீதிஉலா நிகழும் அன்று இரவு ஓர் அக்கினிக் குண்டம் ஏற்படுத்தப்படும் அழல் வழிபாடாகிய இத்திருவிழாவைக் காண பக்தர்கள் பெருந்திரளாக வந்து ௬டியிருப்பர். திங்கள் இரவு இரண்டு மணி அளவில் அம்மனை அழைக்கப்புறப்படுவர். தெப்பக் கிணற்றருகே சென்று அம்மனைக் குண்டத்தருகில் அழைத்து வருவர். அனைவரும் குண்டத்தருகில் வந்து அம்மனை வணங்கிப் பணிந்து நிற்பர். பூசாரி அம்மனுக்கு பூசை செய்து முதலில் குண்டத்தில் இறங்குவர். அவரைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் அம்மனைத் தொழுது குண்டத்தில் வரிசையாக இறங்குவர்கள். இந்நிகழ்ச்சி அடுத்த நாளாகிய செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கால்நடைகளும் இறங்குகின்றன. நடுப்பகலில் பொங்கல் மாவிளக்கு எடுப்பர். புதன் இரவு மின்விளக்குகளில் அலங்கரிக்கப்பட்ட இரத்தில் அம்மனை எழுந்தளுளச் செய்து நாதசுரக் கச்சேரியுடன் புறப்பாடு நடைபெறும். மகாமுனி வருகையும் நடைபெறும். இரவில் அக்கினிக் கம்பம் பிடுங்கப்பட்டு கிணற்றில் விடப்படும்.

கம்பம் நடுவிழா: பூச்சாற்றிலிருந்து ஒன்பதாம்நாள் செவ்வாய்கிழமை இரவு முன் கூறிய பெரியோர்களால் அம்பிகைக்கு ஆராதனை செய்விக்கப் பெற்று அன்றிரவு அக்கினிக்கம்பம் போடுவார்கள். அன்று முதல் அக்கம் பக்கத்தருகே இரவு காலங்களில் சோளர்களும், அருந்ததியினத்தாரும் தங்கள் வாத்தியங்களை முழக்கி, ஆடல், பாடல்கள் செய்வார்கள். காணவும் கேட்கவும் ஆனந்தம் உண்டாகும். பூச்சாற்றிலிருந்து அம்பிகைக்கு தினசரி அபிஷேக ஆராதனை நடைபெறும். திங்கட்கிழமை காலையிலிருந்து வேண்டுதலாளர்கள் அம்பிகையின் (மெரவனை) திருவீதியுலா நடைபெறும். மெரவணைக்குரிய கட்டணத்தைச் செலுத்தி வேலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நன்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பிகையை எழுந்தருளச் செய்து, பலவாத்தியங்கள் முழங்கப் பக்த கோடிகள், வேண்டுதலாளர்கள், வேல் சூலங்களுடன் கோயிலைச் சுற்றி வழிபாடு செய்வார்கள்.

அம்பிகை புறப்பாடு: பூச்சாற்று நிகழ்ந்தபின் மறுநாள் அம்மனைச் சப்பரத்தில் எழுந்தருளச் செய்வர். இச்சப்பரம் ஊர்களின் வழியே உலா வரும் போது பக்தர்கள் பூசைகள் செய்தும், காணிக்கை செலுத்தியும் தம் வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அம்மனின் புறப்பாடு நிகழும் வேளையில் சோலகர் எனப்படும் மலைவாசிகளும், அருந்ததி இனத்தாரும் வாத்தியங்களை முழக்குவர். பூச்சாற்றிலிருந்து எட்டாம்நாள் திங்கட்கிழமை அம்மன் கோயில் வந்து சேர்கின்றாள். வியாழனன்று மஞ்சள் நீர் உற்சவமும், திருக்கோயிலாரால் அன்னதானமும் நடைபெறும். அன்று அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமையன்று மாலை அம்மனுக்கு திருவிளக்குப் பூசை நடைபெறும். மேற்படி பூசையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள்.

மறுபூசை : குண்டம் திருவிழா நடந்த எட்டாம்நாள் திங்கட்கிழமையன்று மறுபூசைத் திருவிழா நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை இரவிலேயே ஏராளமான பக்தர்கள் வந்து கூடி விடுவர். அம்பிக்கைக்கு சிறப்பு அலங்காரம் அதாவது திருவிழாவன்று அலங்கர்த்தது போலத் தங்கக்கவசம் அமைந்த விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிவித்து மலர் மாலைகளால் ஒப்பனை செய்யப்படும். அபிடேகாதிகள் சிறப்பாக நடைபெறும்.

உட்கோயில்கள்: ஆலயவிநாயகர், பொம்மையராயன் அம்மன் திருச்சன்னதிக்கு அடுத்த அர்த்த மண்டபத்தில் கோயில் கட்டிடத்தை ஒட்டிய வகையில் மேற்குப் பார்த்த வண்ணமாக பொம்மையராயசுவாமியும், முன் மண்டபத்தில் கிழக்குப் பார்த்த வண்ணமாக விநாயகரும் இடம் பெற்றிருக்கின்றனர். அம்பிகையின் திருக்கோயிலுக்குத் தெற்குப் பக்கத்தில் மேடை மீது மாதேசுவர திருமூர்த்தியை எழுந்தருள செய்யப்பட்டிருக்கிறது.

சருகுமாரியம்மன் : பண்ணாரி அம்மன் தெப்பக்கிணற்றுக்கு அருகில் மேற்குப் பார்த்த சிறு கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் சருக மகமாரியம்மையை நிலை கொளச் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான கும்பாபிசேகம் கடந்த 10-03-2002 அன்று நடைபெற்றது.

வண்டிமுனியப்பன் : தெப்பக்கிணற்றுக்கு மேற்கில் பள்ளம் ஒன்று தென்வடலாகப் போகிறது. இதில் மழைக் காலத்தில் மட்டும் தண்ணீர் இருக்கும். மற்ற காலங்களில் இருக்காது. தெப்பக் கிணற்றுக்குச் செல்லும் வழிக்கு வடபுறமாக ஒரு மேடை மீது வண்டி முனியப்பசுவாமி அமர்ந்திருக்கிறார். அம்பிகையின் திருவிழா அன்று அவருக்கு சோளகர் சிறப்பாகப் பூசை நடத்தி வருகின்றனர்.

Monday, 21 March 2016